காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓசூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓசூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 4:15 AM IST (Updated: 3 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஓசூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும், அதற்கு துணைபோகும் தமிழக அரசையும் கண்டிப்பதாக கூறி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூர் பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும் வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.வுமான பி.முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

60 பேர் கைது

இதில் கிருஷ்ணகிரி மேற்்கு மாவட்ட தி.மு.க.அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி, ஓசூர் நகர செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர், தனலட்சுமி, மாவட்ட பொறியாளர் பிரிவு அமைப்பாளர் ஞானசேகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முல்லைசேகர், கண்ணன், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய, மற்றும் தமிழக அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பஸ் நிலையத்தில் பஸ்களின் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன் உள்பட தி.மு.க.வினர் 60 பேரை ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம், ஓசூர் அட்கோ இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் தி.மு.க.வினர் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story