காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது


காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பா.ஜனதா சார்பில் மகாசக்தி கேந்திரம் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் கணேசன், ஊடக பிரிவு தலைவர் செல்லபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கட்ராஜ், பொதுச்செயலாளர் அழகு, துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜனதாவை தமிழகத்தில் வலிமையான இயக்கமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற எந்த தேர்தலையும் பா.ஜனதா மிகப்பெரிய வலிமை வாய்ந்த கட்சியாக சந்திக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஒரு சொல் மீதுதான் மாநிலங்களுக்கு இடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே அந்த சொல்லுக்கான விளக்கம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. இந்த சூழலில் பொறுமை காக்காமல் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.

வஞ்சிக்கும் எண்ணம்

காங்கிரஸ் தொலைத்த காவிரியை தி.மு.க. கொண்டு வராத காவிரியை பா.ஜனதாவால் மட்டுமே கொண்டு வர முடியும். தங்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பணிந்து போன தி.மு.க. அரசு தற்போது தமிழக மக்களுக்காக காவிரி பிரச்சினையில் நாடகம் ஆடுகிறது. காவிரி விவகாரம் நீண்டகால பிரச்சினையாக மாறிபோனதற்கு காங்கிரசும், தி.மு.க.வுமே காரணம். இதற்கு நிரந்தர தீர்வு காண பா.ஜனதா முயன்று வருகிறது. போராட்டங்களால் மட்டும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. எங்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும், அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜனதாவிற்கு கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், வர்த்தகர் அணி கோட்ட பொறுப்பாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் சந்திரா, இளைஞர் அணி தலைவர் சோபன், மகளிர் அணி தலைவர் பிரியா, துணைத்தலைவர் அரங்கநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சிவன் நன்றி கூறினார். 

Next Story