கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க.வினர்-போலீசார் இடையே தள்ளு, முள்ளு


கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தி.மு.க.வினர்-போலீசார் இடையே தள்ளு, முள்ளு
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரகுபதி எம்.எல்.ஏ. உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் உள்ள நகர கூட்டுறவு பண்டக சாலையில் 11 இயக்குனர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான நகர செயலாளர் பாஸ்கர் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நின்று கொண்டிருந்த போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், ராஜசேகரன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் கார்த்திக்தொண்டைமான் உள்ளிட்டோரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைப்போல தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்தவர்களையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து தண்ணீர் பாக்கெட்டுகள், கற்கள், நாற்காலிகள் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகரெத்தினம் உள்பட சிலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி தாக்குதல் நடத்தியவர்களை கலைத்தனர்.

தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உள்ளே வேட்புமனுக்களை வாங்கும் அதிகாரி இல்லை. இதுகுறித்து தேர்தல் அதிகாரியும், மாவட்ட பதிவாளருமான சண்முகத்திடம் தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர். தொடர்ந்து நகர கூட்டுறவு பண்டகசாலைக்கு வந்த சண்முகம், நடந்த சம்பவம் குறித்து தனி அலுவலர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டு, இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். இதற்கிடையில் நகர கூட்டுறவு பண்டகசாலையில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் இயக்குனர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் செல்லப்பாண்டியன், ரகுபதி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் புதுக்கோட்டையில் உள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மிருணாளினி மற்றும் மாவட்ட பதிவாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகம் ஆகியோரை சந்தித்து நகர கூட்டுறவு பண்டகசாலை தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த இணைப்பதிவாளர் மிருணாளினி தி.மு.க.வினரிடம் 5 நிமிடம் காத்திருங்கள், மனு வாங்க வருகிறேன் எனக்கூறி விட்டு சென்றுவிட்டார். இதனால் தி.மு.க.வினர் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், வாசுதேவன், அப்துல்ரகுமான் மற்றும் போலீசார் வலுக்கட்டாயமாக தி.மு.க.வினரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.

அப்போது மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் ரகுமான் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே அழைத்து வந்தார்.

அப்போது தி.மு.க.வினர் மனு வாங்க வராத அதிகாரிகளை கண்டித்து, கொண்டுவந்த மனுக்களை அலுவலகத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட முயன்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றபோது, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அவர்களை மறித்து, ரகுபதி எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் உள்பட 17 பேரை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றி புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக தி.மு.க. வக்கீல்கள் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், புதுக்கோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மாவட்ட பொறுப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ, செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்ரகுமான் உள்ளிட்ட போலீசார் தி.மு.க.வினரிடம் அநாகரிகமாக பேசி, சட்டையை பிடித்து இழுத்து ஜனநாயகத்திற்கு புறம்பாக நடந்து கொண்டனர். மனு கொடுக்க சென்ற ரகுபதி எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க.வினரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது பொய் வழக்குகள் போடவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


Next Story