அதிகாரிகள் வராததை கண்டித்து மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு


அதிகாரிகள் வராததை கண்டித்து மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு
x
தினத்தந்தி 3 April 2018 4:30 AM IST (Updated: 3 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில், அதிகாரிகள் வராததை கண்டித்து மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது. விராலிமலை அருகே காளைகளுடன் வந்து முற்றுகை போராட்டமும் நடந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திலகர் திடலில் மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு 7 இயக்குனர் பதவிகளுக்கான தேர்தலுக்கு, அ.தி.மு.க சார்பில் 7 பேர், தி.மு.க.வின் சார்பில் 7 பேர், சி.ஐ.டி.யு சார்பில் ஒருவர் என மொத்தம் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 7 பேரை தவிர மீதமுள்ள 8 பேரை தகுதிநீக்கம் செய்து விட்டு, அ.தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முறைகேடான தேர்தலை கண்டித்து மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேர்தல் நாளன்று தேர்தல் நடத்தும் அதிகாரி வராததை கண்டித்தும், இது குறித்து மேல் அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான பதில் அளிக்க மறுத்ததை கண்டித்தும் கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை, மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.

முற்றுகை போராட்டம்

அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த மொத்தம் 37 பேர் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனை நாளான நேற்று தேர்வு செய்யப்பட்ட ஆளும்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 11 பேரின் பட்டியலை கூட்டுறவு துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க வாசலில் ஒட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்கணேசன், அறிஞர் அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்க முன்னாள் தலைவர் சோமசம்பந்தம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மற்றும் வேட்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதேப்போல விஜயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிக்கு 49 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று தேர்ந் தெடுக்கப்பட்ட ஆளும்கட்சியைச் சேர்ந்த 11 பேரின் பட்டியலை தேர்தல் அதிகாரி ஒட்டினார். இதனால் அதிர்்ச்சி அடைந்த வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளும் கட்சியினரை கண்டித்து, கோஷங்கள் எழுப்பியவாறு கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

காளைகளுடன் போராட்டம்

விராலிமலை அருகே வேலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 26-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. பின்னர் 27-ந்தேதி கலந்தாய்வு நடைபெற்று 28-ந்தேதி வேட்பாளர் இறுதிபட்டியல் மாலை வரை அறிவிப்பு பலகையில் ஒட்டபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மனுதாக்கல் செய்தவர்கள் ஒன்று திரண்டு அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மனுதாக்கல் செய்தவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு நேற்று மீண்டும் வந்தனர். அப்போது அலுவலகம் பூட்டி இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த காளைகளை அலுவலகத்தின் முன்பு கட்டி, அலுவலகத்தை திறக்காமல் சென்றவர்களை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story