திருவெள்ளரை பெருமாள் கோவில் ரத உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவெள்ளரை பெருமாள் கோவில் ரத உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 3 April 2018 4:00 AM IST (Updated: 3 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருவெள்ளரை பெருமாள் கோவில் ரத உற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சமயபுரம்,

தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 4 மணிக்கு பெருமாள், தாயாருடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4.15 மணிக்கு அனந்தராயர் மண்டபம் சென்றடைந்தார். பின்னர், காலை 6.27 மணிக்கு பூஜைகளுடன் கருடன் படம் வரையப்பட்ட கொடியேற்றப்பட்டது. விழாவின் 2-ம் நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 4.30 மணிக்கு பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அனந்தராயர் மண்டபம் சென்றடைகிறார். காலை 10 மணிக்கு காளவாய்பட்டி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு திருவீதி வலம் வந்து 9.45 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்றடைகிறார்.

ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்

நாளை(புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பெருமாள்-தாயார் அனந்தராயர் மண்பத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். மறுநாள் அதிகாலை 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 6 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

4-ம் நாள் முதல் 8-ம் திருநாள் வரை தினமும் மாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபம் சென்றடைகிறார். கருட வாகனம், சேஷ, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி இரவு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், உதவி ஆணையர் ரத்தினவேலு, இணை ஆணையர் ஜெயராமன் மேற்பார்வையில் அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர். 

Next Story