மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 3:19 AM IST (Updated: 3 April 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய அரசை கண்டித்து கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் தென் சென்னை காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொறுப்பாளர் தியாகராயநகர் ஸ்ரீராம், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் இல.பாஸ்கர், செய்தித்தொடர்பாளர் ரவிராஜ், வேளச்சேரி தொகுதி தலைவர் திருவான்மியூர் மனோகர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து கராத்தே தியாகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், பா.ஜ.க. அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மோடி அரசை விமர்சனம் செய்வதால், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

ராகுல் காந்தி விடுக்கும் கட்டளையை எங்களை போன்ற கட்சி தொண்டர்கள் உறுதியோடு ஏற்று செய்வோம். தலித் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ஏற்கனவே இருந்ததுபோல சக்தி வாய்ந்ததாக கொண்டுவருவதற்காகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகவும் தொடர்ந்து போராட்டங்கள், கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். நேற்று (நேற்று முன்தினம்) அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருநாவுக்கரசர் பங்கேற்றார்.

அதன் பின்னர் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கு, தி.மு.க.வை சேர்ந்தவர்கள் காலையிலேயே வந்து குவியத்தொடங்கினர். அதில் காங்கிரஸ் கட்சி கொடி தென்படவே இல்லை. தொலைக் காட்சியில் பார்த்துதான் நாங்களும் பங்கேற்பதற்காக ஓடோடி வந்தோம். திருநாவுக்கரசரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரான கே.ஆர்.ராமசாமி ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக எங்களுக்கும் தகவல் தெரிவித்திருந்தால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்திருப்போம்.

தென் சென்னை மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 13 பேர் இருக்கிறார்கள். இதில் 2 பேர் மட்டுமே இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மீதம் உள்ள 11 பேர் பங்கேற்கவில்லை. இது வருத்தம் அளிக்கிறது. ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று ஒவ்வொருவரையும் வெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்? கட்சி நடத்தும் போராட்டம் என்றால் அவர்களாக தானாக வந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை கராத்தே தியாக ராஜன் செய்திருந்தார்.

Next Story