ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 4:15 AM IST (Updated: 3 April 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோன்று கல்லூரி மாணவர்களும் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை மீண்டும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநகர செயலாளர் ரத்தினபிரவின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ், இணைச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் மரியசூசைராஜ் தலைமை தாங்கினார். இதில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தூத்துக்குடி அருகே உள்ள பிஷப் கால்டுவெல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலையில் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள மதர்தெரசா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி முன்பு நேற்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் மகேஷ் தலைமை தாங்கினார். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் தூத்துக்குடியில் நேற்று பரபரப்பு நிலவியது.

Next Story