நெல்லையில் மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு


நெல்லையில் மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 April 2018 4:00 AM IST (Updated: 4 April 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. இந்த குழந்தை நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒரு பிளாஸ்டிக் பையை சுமந்து சென்றார். அப்போது அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் மர்ம நபரை பிடித்து சோதனை நடத்தினர். இதில் அவர் வைத்து இருந்த பிளாஸ்டிக் பையில் 6 மாத ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது. அந்த நபர் குழந்தையை கடத்திச் செல்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் சந்திப்பு பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு சரணாலயம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த முருகேசன் என தெரிய வந்தது. தொடர் விசாரணையில்,‘ அந்த குழந்தை பாவூர்சத்திரம் அருகே உள்ள மற்றொரு முருகேசன் -வேணி தம்பதியரின் குழந்தை என்பதும், அந்த குழந்தை மூளை வளர்ச்சி சற்று பாதிக்கப்பட்டு இருந்ததால், ஏதேனும் காப்பகத்தில் போட்டுவிட்டு வருமாறு பெற்றோர் கூறியதால், பையில் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் நேற்று குழந்தையின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. பின்னர் போலீசார், பெற்றோரை எச்சரித்து குழந்தையை பராமரித்து, வளர்க்குமாறு கூறினர்.

இதற்கிடையே அந்த குழந்தை காப்பகத்தில் இருந்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தது. நேற்று அங்கு சென்ற பெற்றோரிடம், குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தேவையான தொடர் சிகிச்சை அளித்து அதன் பிறகு பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story