மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசையும், மாநில அரசு அதற்கு முறையான அழுத்தம் தரவில்லை என கூறியும் அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் அருப்புகோட்டை எம்.எல்.ஏ.யுமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

வடக்கு மாவட்ட செயலாளரும் திருச்சுழி எம்.எல்.ஏ.யுமான தங்கம் தென்னரசு, விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. லிங்கம், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் விநாயக மூர்த்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் திருப்பதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுவதாக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தேச மக்கள் முன்னேற்ற கழகமும் தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக அதன் தலைவர் பரத்ராஜா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story