காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அரியலூரில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்,

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் இவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் 3-ந்தேதி (நேற்று) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

உண்ணாவிரதம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அரியலூர் பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் நாற்காலிகள் போடப்பட்டு மேற்கூரை மற்றும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. போராட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story