மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்: எல்.ஐ.சி. அலுவலகம் மீது செருப்பு-கற்கள் வீச்சு


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்: எல்.ஐ.சி. அலுவலகம் மீது செருப்பு-கற்கள் வீச்சு
x
தினத்தந்தி 4 April 2018 4:30 AM IST (Updated: 4 April 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் பங்கேற்ற போராட்டத்தின் போது தஞ்சையில் எல்.ஐ.சி. அலுவலகம் மீது செருப்பு-கற்கள் வீசப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் தஞ்சையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்தன.

அதன்படி தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஒரத்தநாடு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக வந்தனர்.

அப்போது அங்கு எல்.ஐ.சி. அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் சாலையில் நின்று கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் எல்.ஐ.சி. அலுவலம் நோக்கி செருப்பை வீசினார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அந்த நபரை பிடித்து இழுத்தனர். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் சாலையில் கிடந்த கற்களை எடுத்து எல்.ஐ.சி. அலுவலகம் மீது சரமாரியாக வீசினர். இதில் பல கற்கள் எல்.ஐ.சி. பெயர் பலகை மீது விழுந்தது. இதில் பெயர் பலகை சேதம் அடைந்தது. சில கற்கள் எல்.ஐ.சி. அலுவலக வளாகத்திற்குள் வந்து விழுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அதற்குள் தி.மு.க. நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதன் பின்னர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் காந்திஜி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் து.செல்வம், நீலமேகம், சண்.ராமநாதன், இறைவன், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் வக்கீல் அன்பரசன், ம.தி.மு.க. பேச்சாளர் விடுதலைவேந்தன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சந்திரகுமார், செல்வகுமார், திராவிடர் கழக நிர்வாகிகள் ஜெயக்குமார், குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story