கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர், சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர், சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டி
x
தினத்தந்தி 4 April 2018 2:40 AM IST (Updated: 4 April 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவேகவுடா அறிவித்தார்.

ராமநகர்,

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் குமாரசாமி 2 தொகுதியில் போட்டியிடுவார். ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதியிலும் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். கட்சி தொண்டர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய 2 தேசிய கட்சிகளும் பரஸ்பரம் குற்றப்பத்திரிகையை வெளியிடுகின்றன. அதனால் அந்த 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள் ஆகும்.

எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத ஜனதா தளம்(எஸ்) கட்சி குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தேசிய கட்சிகள் செயல்படுகின்றன. ஜனதா தளம்(எஸ்), பா.ஜனதாவின் ‘பீ-டீம்‘ என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். அவர் பொறுப்புடன் பேச வேண்டும்.

பா.ஜனதா ஆட்சிக்கு வரவே முடியாது. நாம் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும். மாநில கட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். கனகபுரா, ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் வெற்றி பெற்றால், எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் நாடாளுமன்ற மக்களவைக்கு செல்ல முடியும்?. நீங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும்.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 9 அம்சங்கள் அடங்கிய ஒரு கோரிக்கை மனுவை விவசாயி ஒருவர் என்னிடம் கொடுத்துள்ளார். அதை நமது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பேன். எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்றால் ஜனதா தளம்(எஸ்) கட்சி 115 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அமித்ஷா, ராகுல் காந்தி அடிக்கடி கர்நாடகத்திற்கு வருகிறார்கள். எக்காரணம் கொண்டும் அவர்களின் கட்சியை ஆதரிக்க வேண்டாம்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

இதையடுத்து குமாரசாமி பேசுகையில், “ராமநகர், சென்னப்பட்டணா ஆகிய 2 தொகுதிகளும் எனது 2 கண்களை போன்றது. இதில் ஒரு தொகுதியில் நான் தோற்றாலும் கண் பார்வையற்றவனை போல் ஆகிவிடுவேன். இதுபற்றி நீங்களே முடிவு செய்யுங்கள். எனக்கு ‘கமிஷன்‘ அரசு தேவை இல்லை. மக்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்“ என்றார்.


Next Story