காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 April 2018 4:15 AM IST (Updated: 4 April 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று அ.தி.மு.க. சார்பில் நாமக்கல் குளக்கரை திடலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திர சேகரன், பொன்.சரஸ்வதி, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராஜூ, தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தின் போது அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் இந்த அறவழி போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த 11 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இதை பற்றி பேசாதவர், இப்போது அரசியலுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளார். நாங்கள் நடத்தும் போராட்டம் நாடகம் அல்ல. தமிழர்களின் உண்மையான உணர்வை மீட்டெடுக்கும் போராட்டம். வாக்கு வங்கிக்காக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ்.காளியப்பன், நாமக்கல் நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நகர செயலாளர்கள் வெள்ளிங்கிரி, பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story