காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விருத்தாசலம் தபால் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விருத்தாசலம் தபால் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 April 2018 4:00 AM IST (Updated: 4 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விருத்தாசலம் தபால் நிலையத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

விருத்தாசலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடந்த 3 நாட்களாக சாலை மறியல், ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விருத்தாசலத்தில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் வக்கீல் அம்பேத்கர் தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சேலம் சாலை, மேலக்கோட்டை வீதி, தென்கோட்டை வீதி வழியாக வந்து கடைவீதியில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் வக்கீல்கள் விஜயகுமார், சந்திரசேகர், அருள்குமார், சங்கரய்யா, செல்வகுமார், புஷ்பதேவன், சதீஷ்குமார், மணிகண்டராஜன், செல்வபாரதி, செல்வி, கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலியில் பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சங்க அவசரக்கூட்டம் நடந்தது. இதற்கு பார் அசோசியேஷன் சங்க தலைவர் வேலாயுதம், அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் கலைமணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மூத்த வக்கீல்கள் ஆனந்தராஜ், வெங்கட ரமணராமலிங்கம், செந்தில்முருகன், மாணிக்கவேலு, மணவாளன், அட்வகேட் அசோசியேஷன் சங்க செயலாளர் மூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிப்பது, நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள அனைத்து கட்சி முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாளை வரை கோர்ட்டு பணிகளை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story