தென்காட்டுபாளையம் கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் முறையாக நடத்தக்கோரி தேர்வான 6 இயக்குனர்கள் விலகல்


தென்காட்டுபாளையம் கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் முறையாக நடத்தக்கோரி தேர்வான 6 இயக்குனர்கள் விலகல்
x
தினத்தந்தி 4 April 2018 4:29 AM IST (Updated: 4 April 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முறையாக நடத்தக்கோரி தேர்வான 6 இயக்குனர்கள் விலகல், ஈரோடு துணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,060 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. கவுந்தப்பாடி தென்காட்டுபாளையம் கூட்டுறவு சங்கத்தில் 11 இயக்குனர்கள் பணியிடங்களுக்கு மொத்தம் 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இவர்களின் வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மீதமுள்ள 12 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்தநிலையில் தேர்வு செய்யப்பட்ட 11 பேரில் 6 பேர் விலகல் கடிதத்துடன் தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அங்கு துணைப்பதிவாளர் இளங்கோவன் இல்லாததால் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஈரோடு கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் முற்றுகை போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story