காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலத்தில், அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சேலம்,
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான பொன்னையன் தலைமை தாங்கினார்.
மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் எம்.பி., மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடவும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க கோரியும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் விவசாயிகளின் நலனை காத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசினார்கள்.
காவிரி நதி நீர் பிரச்சினையை பொறுத்தவரை 1967-ம் ஆண்டில் இருந்தே தமிழகத்தை மத்திய அரசும், கர்நாடக அரசும் வஞ்சித்து வருகிறது. மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வும், புதுப்பிக்கப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை மீறியும், 2 முறை சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மீறியும் செயல்படாமல் இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தையும், நதி நீரை ஒழுங்குப்படுத்தும் குழுவையும் 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டும், அதை காலில் போட்டு மிதிக்கக்கூடிய அளவுக்கு கர்நாடக அரசும், கர்நாடக அரசுக்கு அரசியல் நோக்கத்தோடு எப்போதும் துணை போகின்ற பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து டெல்லியில் ஆதரவாக செயல்படுகிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் நிறைவேற்றாமல் இருப்பது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். டெல்லியில் 37 அ.தி.மு.க. எம்.பி.க்களும் தொடர்ந்து போராட்டம் செய்து நாடாளுமன்றத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒற்றை கோரிக்கைக்காக முடக்கியதை இந்த நாடு அறியும்.
நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற ஒரு பொய்யை தி.மு.க. திரும்ப, திரும்ப சொன்னால் உண்மையாகி விடும் என செயல்படுகிறது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினும், காங்கிரசும் நாங்கள் செயல்படாமல் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். செயல்படாமல் இருப்பது தி.மு.க.வும், காங்கிரசும் தான். நாங்கள் தான் எல்லா போராட்டங்களையும் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த போராட்டம் மேன்மேலும் அழுத்தத்தை தந்து மத்திய அரசை உணர வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story