நாடுகளிடையே நட்புறவை வளர்க்கும் காமன்வெல்த் போட்டி
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து உலக அளவில் அனைவரின் நன்மதிப்பையும், கவனத்தையும் காமன்வெல்த் போட்டி பெற்றுள்ளது.
கிரேக்க நாட்டில் கி.மு.776-ம் ஆண்டுகளுக்கு முன்பே நடத்தப்பட்டு வந்ததாக வரலாற்றில் அறியப்படும் ஒலிம்பிக் போட்டிகள், பிற்காலத்தில் கிரேக்க நாட்டை ஒட்டி அமைந்த நாடுகளுக்கு இடையேவும் நடத்தப்பட்டன. கிரேக்க நாட்டை ஒட்டி அமைந்த நாடுகளிடையே ஏற்பட்ட தொடர் போர் காரணமாக இந்த போட்டிகள் தடைபட்டன.
அதன்பிறகு, உலக நாடுகளுக்கிடையே நட்புறவையும், ஒற்றுமையையும் விளையாட்டு போட்டிகள் மூலம் வளர்த்திட முடியும் என்பதை உணர்ந்த பிரெஞ்சு நாட்டின் கல்வியாளர் கோபார்டின், 1896-ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டியை, ஒலிம்பிக் போட்டியின் பிறப்பிடமான கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில் வெற்றிகரமாக தொடங்கி நடத்தி முடித்தார்.
இந்த நவீன ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தை ஓர் வழிகாட்டியாக ஏற்று, அப்போது பல நாடுகளை தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசும், தங்கள் ஆளுமைக்கு உட்பட நாடுகளுக்கிடையே நட்புறவையும், இணக்கத்தையும் வளர்த்திட வேண்டும் என எண்ணியது.
இத்தருணத்தில் பிரிட்டிஷ் அரசின் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டு விழா கொண்டாட்டங்கள் தொடங் கின. அதன் ஒரு நிகழ்வாக தங்கள் ஆளுமைக்குட்பட்ட நாடுகள் பங்கேற்ற குத்துச்சண்டை, மல்யுத்தம், தடகளம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளை முதன் முறையாக பிரிட்டிஷ் அரசு நடத்தியது.
இதைத்தொடர்ந்து, 1930-ம் ஆண்டு கனடா நாட்டின் ஏம்மில்டன் நகரில் முதலாவது ‘பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுப் போட்டி’ நடத்தப்பட்டது. அதன் பிறகு, பிரிட்டிஷ் காமன்வெல்த் போட்டிகள் என்று அழைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. பிறகு, 1978-ம் ஆண்டு முதல் இந்த போட்டி, ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டி’ என்ற பெயரை சுமக்க தொடங்கியது. இன்றும் அதே பெயரில் போட்டி நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் அனைத்து கண்டங்களையும் உள்ளடக்கிய 54 சுதந்திர தன்னாட்சி நாடுகளை உறுப்பினராக கொண்டு காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு, உறுப்பு நாடுகளில் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான மாற்றம் ஆகிய சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான குறிக்கோள்களை வென்றெடுத்திட ஆலோசனைகளும் உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த அமைப்பு நாடுகளிடையே நட்புறவை வளர்த்திடும் அமைப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது.
இன்றைய நவீன கால கட்டத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து உலக அளவில் அனைவரின் நன்மதிப்பையும், கவனத்தையும் காமன்வெல்த் போட்டி பெற்றுள்ளது. ஏனென்றால், ஆசியன் கேம்ஸ், ஆப்ரிக்கன் கேம்ஸ், யூரோப்பியன் கேம்ஸ் போன்ற போட்டிகள் ஓர் பூகோள மண்டலத்துக்கு உட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், காமன்வெல்த் போட்டிகள் பூகோள எல்லையை கடந்து உலக அளவில் நடத்தப்பட்டு வருவது பெருமைக்குரியது.
மேலும் இந்தப் போட்டி மட்டுமே நட்புறவு போட்டி என்ற அடை மொழியை தாங்கி நிற்கிறது. இது காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதுடன் விளையாட்டுப் போட்டிகள் நட்புறவை வளர்ப்பதற்கு பெரிதும் பயன்படும் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடத்தப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டியின், தொடக்க விழா அணிவகுப்பில் பரம எதிரி நாடுகளான தென்கொரியா, வடகொரியா அணிகள் ஒன்றாக இணைந்து ஒரே கொடியின் கீழ் அணிவகுப்பில் கலந்து கொண்டன. இது விளையாட்டுப் போட்டிகள் நட்புறவை வளர்த்திடும் என்பதற்கு சிறந்த உதாரணம். இந்த நிகழ்வு உலக மக்கள் அனைவரின் பாராட்டுக்களையும், நன்மதிப்பையும் பெற்றது.
ஒலிம்பிக் போட்டியைப் போலவே காமன்வெல்த் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் இன்று (ஏப்ரல் 4-ந்தேதி) முதல் 15-ந்தேதி முடிய நடைபெறுகிறது.
இந்திய அணி சார்பாக மொத்தம் 326 பேர் (218 வீரர்கள், வீராங் கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள், மருத்துவர்கள் உள்பட) கலந்து கொள்கிறார்கள். இந்த அணியின் செலவினை இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்றுக்கொள்கிறது. தொடக்க விழா அணி வகுப்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நம் இந்திய நாட்டு மூவர்ண கொடியை ஏந்தி செல்கிறார். இவர் 2016-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 64 பதக்கங்களை பெற்று மொத்த பதக்கப்பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்தது.
இந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணி அபார சாதனையுடன் வரலாறு படைத்திட நம் இந்திய மக்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வோம்.
பேராசிரியர் தமிழ்ச்செல்வம், துணைத் தலைவர், தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம்
Related Tags :
Next Story