தேனி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 114 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டும், குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் ஆகிய 2 இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேனியில் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியை முற்றுகையிட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
முற்றுகையில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் உள்பட மொத்தம் 48 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். அதேபோல், கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக கம்பம் பகுதி செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமலை கொழுந்து, முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கம் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 66 பேரை போலீசார் கைது செய்து புதுப்பள்ளி வாசல் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாவட்டத்தில் மொத்தம் 114 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆண்டிப்பட்டியில் பஸ்நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்கள் ஆண்டிப்பட்டி வேலப்பர் கோவில் சாலை பிரிவில் இருந்து பஸ்நிலையம் வரையில் கருப்பு கொடி ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். அப்போது இன்று (வியாழக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை அவர்கள் வினியோகித்தனர்.
Related Tags :
Next Story