என்.எல்.சி. சுரங்கம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்


என்.எல்.சி. சுரங்கம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 5 April 2018 3:30 AM IST (Updated: 4 April 2018 11:24 PM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி. சுரங்கம் விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் சுரங்கம் 1ஏ-வில் விரிவாக்க பணியை மேற்கொள்ள நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இதற்கென சுரங்கத்தையொட்டி தென்குத்து கிராம பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதற்கு தென்குத்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளலார் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கம், தென்குத்து கிராம விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் நல சங்கம், கிராம மக்கள் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

இதற்கு வள்ளலார் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்க துணைதலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் வைரக்கண்ணு, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் அமிர்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன், கோவிந்தராசு, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின் போது, என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கம் 1ஏ விரிவாக்க பணிக்காக தென்குத்து கிராமத்தை கையகப்படுத்தக்கூடாது, 2041-ம் ஆண்டு வரை மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் பழுப்பு நிலக்கரி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திடம் கையிருப்பில் உள்ளது. மீதம் தேவைப்படும் பழுப்பு நிலக்கரியான 38.64 மில்லியன் டன்னை சுரங்கம் 1-ல் உபரி மண் நீக்கப்பட்டுள்ள இடத்திலும், என்.எல்.சி. நகர குடியிருப்பு பகுதியான வட்டம் 24 முதல் 27 வரையில் உள்ள பகுதியை பயன்படுத்தியும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.

தென்குத்து கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டால் தமிழக அரசுக்கும், என்.எல்.சி. நிறுவனத்துக்கும் பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்படும், ஏனெனில் இங்கு நிலக்கரி படிமம் அதிகளவில் இல்லை, இது தொடர்பாக முழு விவரத்துடன் 8-5-2017, 3-7-2017, 12-2-2018 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்ட கலெக்டர், என்.எல்.சி. நில எடுப்பு துறை, சுரங்க துறை இயக்குனர், என்.எல்.சி. நிறுவன தலைவர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்துள்ளோம். மேலும் பிரதமர் மோடிக்கும் இது தொடர்பாக மனு அனுப்பி வைத்துள்ளோம்.

ஆகையால் இதை கருத்தில் கொண்டு தென்குத்து பகுதியில் நிலம் கையகப்படுத்தக்கூடாது என்கிற அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும், இதையும் மீறி செயல்படுத்த நினைத்தால் சுரங்கம் 1ஏ பகுதியில் உள்ள பள்ளங்களில் கிராம மக்கள் அனைவரும் இறங்கி போராட்டம் செய்வது, இந்திய குடியுரிமையை ரத்து செய்ய கோரி ஆதார், ரேஷன் கார்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து போராட்டம் செய்வது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒருங்கிணைப்பாளராக பழனிவேல், அன்பழகன், பாலகிருஷ்ணன், கண்ணுசாமி, சாமுவேல் உள்ளிட்ட பலர் செயல்பட்டனர். போராட்டம் முடிவில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமர் மோடிக்கு மனு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

Next Story