திருப்பூர், உடுமலையில் ரெயில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 138 பேர் கைது


திருப்பூர், உடுமலையில் ரெயில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 138 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 5 April 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர், உடுமலையில் ரெயில் மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 138 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் திருப்பூரில் நேற்று அறிவிக்கப்பட்டது. திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, முதல் ரெயில்வே கேட் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் கட்சியினர் திரண்டனர். ரெயில் நிலையத்துக்குள் வந்து போராட்டம் நடத்துவார்கள் என்று நினைத்து திருப்பூர் ரெயில் நிலையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் கட்சி அலுவலகம் அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில், மாநிலக்குழு உறுப்பினர்கள் காளியப்பன், ரவிச்சந்திரன், இசாக் உள்பட கட்சி நிர்வாகிகள், கொடியை ஏந்தி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர்.

பின்னர் திடீரென்று முதல் ரெயில்வே கேட் வழியாக நுழைந்து தண்டவாளத்தை நோக்கி சென்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதில் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் தடுப்புகளை தாண்டி கட்சியினர் தண்டவாள பகுதிக்குள் நுழைந்தனர்.

காலை 10.20 மணிக்கு கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் செங்கொடியை ஏந்தியபடி தண்டவாளத்தில் நின்றனர். இதை கவனித்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 90 பேரை கைது செய்து திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. நேற்றுகாலை மதுரையில் இருந்து கோவை சென்ற பயணிகள் ரெயில் 11.30 மணிக்கு உடுமலை ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கட்சிக்கொடிகளுடன் வந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து ரெயில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சவுந்திரராஜன், ரணதேவ் மற்றும் 19 பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story