500 ரூபாய் நோட்டு கட்டுக்குள் வெற்று காகிதங்கள்: கோவையில் கைதான 4 பேரும் ரூபாய் இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்


500 ரூபாய் நோட்டு கட்டுக்குள் வெற்று காகிதங்கள்: கோவையில் கைதான 4 பேரும் ரூபாய் இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 5 April 2018 4:30 AM IST (Updated: 5 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

500 ரூபாய் நோட்டு கட்டுக்குள் வெற்று காகிதங்கள் வைத்திருந்ததாக கோவையில் கைதான 4 பேரும் ரூபாய் இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த ஒரு காரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சோதனை செய்தனர். காரில் கட்டு, கட்டாக பணம் இருந்தது. ஆனால் அவற்றில் ஒரு சிலநோட்டுகளே ரூபாய் நோட்டுகள் ஆகும்.

மேலும், கீழும் 500 ரூபாய் நோட்டுகளும், இடையில் வெற்று காகித தாள்களையும் மறைத்து வைத்திருந்தனர். இதுகுறித்து கேட்ட போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து காரில் இருந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ஊட்டியை சேர்ந்த நடராஜன் (வயது 60), சரவணம்பட்டியை சேர்ந்த பாலமுரளி(40), கோவைப்புதூரை சேர்ந்த அப்துல் காதர்(54) மற்றும் சிவகங்கையை சேர்ந்த நாதன் (47) என்பதும், இவர்கள் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பலரை ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான நடராஜன் மீது ஊட்டி, சிங்காநல்லூர் போலீஸ் நிலையங்களில் ரூபாய் இரட்டிப்பு மோசடி வழக்குகள் உள்ளன. பாலமுரளி மீதும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ரூபாய் இரட்டிப்பு மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.

பல்லடத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றுவதற்காக அசல் பணத்துடன், காகித கட்டுகளை அடுக்கி வைத்து காரில் எடுத்துச்செல்லும்போது இந்த மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது. இந்த கார் நாதன் என்பவருக்கு சொந்தமானது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story