காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 116 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் வணிகர்கள், மாணவர்கள், பல்வேறு விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை முதல் திருவண்ணாமலை ரெயில் நிலையம் முன்பு திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியிலும், ரெயில்வே போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் பாமினி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு பகல் 11.40 மணி அளவில் வரும். அந்த ரெயிலை மறிக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட தலைவர் முத்தையன் தலைமையில், நிர்வாகிகள் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

திருவண்ணாமலை ரெயில் நிலையம் அருகே திண்டிவனம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே ரெயில் மெதுவாக வந்தபோது திடீரென நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் மாதவன் தலைமையில், நிர்வாகிகள் கட்சி கொடிகளுடன் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனை கவனித்த ரெயில் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

ரெயில் மறியலால் திண்டிவனம் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்தனர். போராட்டத்தினால் திண்டிவனம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பாமினி எக்ஸ்பிரஸ் ரெயில், திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்குள் வந்தது. அங்கு காத்திருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் ரெயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதி, செயற்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், அரசு உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

கண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர்.

மறியலில் ஈடுபட்ட 25 பேரை, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

போளூர் ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.ருத்திராச்சாரி, மாவட்ட குழு உறுப்பினர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் மா.சுப்பிரமணி உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.

Next Story