காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை பூட்டி மாணவர்கள் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை பூட்டி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:30 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையத்தின் ஷட்டரை பூட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வக்கீல்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, முற்றுகை போராட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சையில் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்டா மாணவர்கள், இளைஞர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி நேற்று போராட்டத்தில் குதித்தனர். ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி தலைமையில் மாணவர்கள் நேற்று மாலை 4.15 மணிக்கு தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென தலைமை தபால் நிலையத்தின் இரும்பு ஷட்டரை இழுத்து பூட்டினர். பின்னர் தலைமை தபால் நிலையம் முன்பு அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். அதனை மாணவர்கள் ஏற்காமல் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போலீசார், மாணவர்கள் ஒவ்வொருவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது சில மாணவர்கள் கைது செய்ய முடியாதவாறு கைகோர்த்து கொண்டனர். இருப்பினும் போலீசார் ஒவ்வொருவரையும் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட 41 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள், தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காமல் துரோகம் செய்து வருகிறது. எனவே தமிழர்களே, இனியும் வேடிக்கை பார்க்காமல் வீதியில் இறங்கி போராட வாருங்கள். அப்போதுதான் காவிரி நீர் நமக்கு வரும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டிப்பதோடு, இனி தமிழகத்தில் உள்ள தபால் நிலையம், ரெயில் நிலையம், பாஸ்போர்ட், வருமானவரி அலுவலகம் என மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம் என அறைகூவல் விடுக்கிறோம்” என்றனர். 

Next Story