காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 4-வது நாளாக தி.மு.க.-கூட்டணி கட்சியினர் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலம் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக தி.மு.க.-கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இன்றைய முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரமும் வினியோகம் செய்தனர்.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சேலம் மாநகரில் முதல் நாள் ஆர்ப்பாட்டம், 2-வது நாள் சேலம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம், 3-வது நாளான நேற்று முன்தினம் சேலம் மெய்யனூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
நேற்று 4-வது நாளாக சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடத்திட திரண்டனர். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி.கே.சுபாசு, தலைமை செயற்குழு உறுப்பினர் சூடாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. மாநகர செயலாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் திருநாவுக்கரசு, வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், மீனவர் அணி துணை அமைப்பாளர் மணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், சேலம் மாநகரில் இன்று நடக்க உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, செவ்வாய்பேட்டை, கோட்டை, முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகர்கள், லாரி உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட அழுத்தம் கொடுக்கும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அயோத்தியாபட்டணம் ஒன்றிய அலுவலகம் முன்பு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கவுதமன், வெண்ணிலா சேகர், சுரேஷ்குமார், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் சங்கர், அயோத்தியாபட்டணம் முன்னாள் தலைவர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.பி.வைத்திலிங்கம், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கெங்கவல்லி அண்ணா சிலை முன்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ், கொங்கு நாடு முன்னேற்ற கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காமராஜ், பேரூர் செயலாளர் ஷேக் மைதின், காங்கிரஸ் சார்பில் வையாபுரி, கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் சேகர் மற்றும் லோகநாதன், தங்கவேல், ஒதியத்தூர் ராமலிங்கம், லோகு, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story