ஓமலூர் அருகே கருக்கலைப்பில் பலியான கல்லூரி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அண்ணன் கைது


ஓமலூர் அருகே கருக்கலைப்பில் பலியான கல்லூரி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அண்ணன் கைது
x
தினத்தந்தி 5 April 2018 4:00 AM IST (Updated: 5 April 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கருக்கலைப்பில் கல்லூரி மாணவி பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவருடைய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கடந்த மாதம் 28-ந்தேதி சேலம் அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கருக்கலைப்பு செய்ததால் தான் அந்த மாணவி இறந்ததாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கல்லூரி மாணவி ஓமலூர் அருகே நடுப்பட்டி கொல்லர்தெருவில் கிளினிக் நடத்திய சுல்தானா (வயது 52) என்பவரிடம் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் நடுப்பட்டிக்கு சென்று சுல்தானாவிடம் விசாரித்தனர். இதில், சுல்தானா முறையாக டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ கருவிகளை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இணை இயக்குனர் வளர்மதி தீவட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் சுல்தானாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சுல்தானாவின் கணவர் பெயர் நவாப்ஜான். சுல்தானா பிளஸ்-2 படித்து விட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக வேலைப்பார்த்தார். அதில் கிடைத்த அனுபவத்தின் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடுப்பட்டியில் வீட்டின் ஒரு பகுதியில் கிளினிக் தொடங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு செய்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில், அந்த மாணவியின் அண்ணன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து கல்லூரி மாணவியின் அண்ணன் கைது செய்யப்பட்டார். இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்தார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு காடையாம்பட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில், சேலையில் கலர்கற்கள் பதிக்கும் வேலை பார்த்து வருகிறார்.

கைதான போலி டாக்டர் சுல்தானா, கல்லூரி மாணவியின் அண்ணன் ஆகியோரை போலீசார் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story