மோனோ ரெயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் தொடங்க வாய்ப்பு


மோனோ ரெயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் தொடங்க வாய்ப்பு
x
தினத்தந்தி 5 April 2018 5:20 AM IST (Updated: 5 April 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

6 மாதமாக முடங்கி கிடக்கும் மோனோ ரெயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி தகவல்.

மும்பை,

மும்பையில் 6 மாதமாக முடங்கி கிடந்த மோனோ ரெயில் சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2014-ம் ஆண்டு மும்பை செம்பூர்- வடலா இடையே மோனோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பயணிகளிடம் போதிய வரவேற்பு பெறாமல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த மோனோ ரெயில் சேவை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோனோ ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்திற்கு பின்னர் முற்றிலுமாக முடங்கியது. கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் மோனோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

இந்தநிலையில், மீண்டும் மோனோ ரெயில் சேவையை தொடங்க மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தனியார் நிறுவனங்கள் மூலம் மோனோ ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு இரண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே, கடந்த மாதம் மோனோ ரெயில் வழித்தடத்தில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு நடந்தது. அவர் தனது அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அவர் அறிக்கை விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மாநில அரசிடம் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர் அடுத்த மாதம் (மே) மோனோ ரெயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story