காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியல்
x
தினத்தந்தி 6 April 2018 3:30 AM IST (Updated: 5 April 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் கடலூர் மாவட்டத்திலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நேற்று கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.45 மணிக்கு வந்தது. அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் நகர செயலாளர் தமிழ்மணி தலைமையில் நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்மணி, மாநில செயற்குழு உறுப்பினர் அமர்நாத், நகர துணை செயலாளர் செந்தமிழ் மற்றும் நிர்வாகிகள் ராமு, கருணாகரன், கவுதம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று விருத்தாசலம் ரெயில் நிலையம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்களில் சிலர் ரெயில் நிலையத்திற்குள் சென்று, காலை 11.50 மணிக்கு வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். அதன்பிறகு அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த மறியலால் சுமார் 10 நிமிடம் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதேபோல் கிள்ளை ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த மயிலாடுதுறை-விழுப்புரம் பயணிகள் ரெயிலை கிள்ளை தி.மு.க. நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் கூட்டணி கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிள்ளை ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, சசிகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ரமேஷ்பாபு, கற்பனைசெல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் மாதவன் உள்பட 50 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சிதம்பரம் அருகே மீதிகுடி ரெயில் நிலையத்துக்கு வந்த ராமேஸ்வரம்-வாரணாசி விரைவு ரெயிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரெயில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரவீந்திரன் உள்பட 57 பேரை கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி மந்தாரக்குப்பம் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அப்போது அவர்கள் அங்கு வந்த காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரெயிலை மறித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 145 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story