குன்னூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது
குன்னூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி குன்னூரில் தி.மு.க., காங்கிரஸ், இடது கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பிய படி ஊர்வலமாக லெவல் கிராசிங் வந்தனர். அங்கு மலை ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடு பட்டனர்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலைரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அரசியல் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர் சிவப்பு துணியை காட்டி ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், நகர செயலாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், காங்கிரஸ் நகர தலைவர் லாரன்ஸ், இடது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுதாகர் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த 200 பேரை கைது செய்தனர். அதன்பிறகு அந்த மலை ரெயில் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
குன்னூர் அருகே உள்ள எல்லநள்ளியில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அனுமதியின்றி போராட்டம் நடத்திய தி.மு.க. நிர்வாகி ஜான் உள்பட 40 பேரை கைது செய் தனர்.
Related Tags :
Next Story