காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கூடலூர், பந்தலூரில் கடைகள் அடைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கூடலூர், பந்தலூரில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 April 2018 3:30 AM IST (Updated: 6 April 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கூடலூர், பந்தலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

கூடலூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோ, ஜீப், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. கூடலூரில் அதிகாலையில் சில கடைகள் திறந்து இருந்தது. இதை கண்ட தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டல்கள், சிறிய கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டது.

இந்த சமயத்தில் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக கர்நாடகா அரசு பஸ் பழைய பஸ் நிலையம் வந்தது. இதைகண்ட தி.மு.க.வினர் அந்த பஸ்சை வழிமறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டதால் கர்நாடகா பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல் தமிழக அரசு பஸ்கள் பெரும்பாலானவை கூடலூர் பகுதியில் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கூடலூர் பழைய பஸ் நிலையம் போக்குவரத்து சிக்னல் பகுதியில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட தி.மு.க.வினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 31 தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து கூடலூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி குஞ்சு முகமது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், குணசேகரன், முகமது கனி உள்பட 38 பேர் மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல் தேவர்சோலை பஜாரில் தி.மு.க. நிர்வாகி மாதேவ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பாடந்தொரையில் சுப்பிரமணி தலைமையில் 11 பேரும், சூண்டியில் முருகையா தலைமையில் 25 பேரும், மண்வயலில் ஜோசப் தலைமையில் 9 பேரும், மசினகுடியில் சதீஷ் தலைமையில் 20 பேரும் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பந்தலூர் பஜாரில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் காங்கிரஸ் கட்சி அனஸ் எடாலத், எல்.பி.எப். துணை பொதுச்செயலாளர் மாடசாமி, அம்பேத்கார் மக்கள் கட்சி இந்திரஜித், முருகவேல் உள்பட 103 பேர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

உப்பட்டியில் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் 34 பேரும், கொளப்பள்ளியில் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலைமையில் இளைஞர் அணி அமைப்பாளர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராஜன், முஸ்லிம் லீக் அனிபா உள்பட 60 பேர் மறியலில் ஈடுபட்டனர். பந்தலூர் தாலுகாவில் 12 இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story