சென்னையில் இருந்து வெளிமாநிலம் செல்லும் பஸ் சேவை பாதிப்பு


சென்னையில் இருந்து வெளிமாநிலம் செல்லும் பஸ் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2018 5:15 AM IST (Updated: 6 April 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கல்வீச்சு சம்பவம் எதிரொலியால் சென்னையில் இருந்து வெளிமாநில பஸ்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. எனினும் மாநகர பஸ்கள் வழக்கம்போல இயங்கின.

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு கொடுத்தன. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக சென்னையில் பஸ்கள் பெருமளவில் இயங்காது என்றே கருதப்பட்டது. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவெடுத்த காரணத்தாலும், அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை கொண்டு மாநகர பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்றும், பஸ் நிலையங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் வழக்கம்போல பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

வேலைநிறுத்தம் காரணமாக பஸ்கள் இயங்காது என்று கருதியதால் கோயம்பேடு பஸ் பஸ் நிலையத்துக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. அதே சமயம் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் ஏராளமானோர் பயணம் செய்தனர். மேலும் ‘ஆன்-லைன்’ மூலம் ஆட்டோ, கார்களுக்கான முன்பதிவு 30 சதவீதம் அதிகரித்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் தமிழக பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் உடனடியாக வெளிமாநில பஸ் சேவை காலையில் நிறுத்தப்பட்டது. பிற்பகலில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி இயக்கப்படும் பஸ்கள் திண்டிவனம், கடலூர் மார்க்கமாக இயக்கப்பட்டன. புதுச்சேரிக்கு நேற்று எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை.

இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு மாலை வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாது என்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் அறிவிப்பு வெளியிட்டன. இதனால் வெளிமாநிலத்துக்கு செல்ல இருந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 500-க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெயில் மறியலில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ரெயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பஸ் நிலையத்தில் அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Next Story