காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சாலைமறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 6 April 2018 4:45 AM IST (Updated: 6 April 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடந்தது.

கும்மிடிப்பூண்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமையில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக பைபாஸ் சாலையை அடைந்தனர். அங்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 700 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ½ மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் நகர தி.மு.க. சார்பில் சாலை மறியல் போரட்டம் நடைபெற்றது இந்த போரட்ட்திற்கு நகர செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என 300-க் கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பஸ் நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சோழவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சோழவரம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மீஞ்சூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பூந்தமல்லி ஒன்றியம் மற்றும் நகர தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஏராளமானோர் பூந்தமல்லி பஸ் நிலையம் முன்பு பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ்களை சிறை பிடித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியலில் பூந்தமல்லி நகர செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் தேரடியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், வர்த்தக பிரிவு துணை செயலாளர் வி.எஸ்.ராம கிருஷ்ணன், அன்பழகன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திருமாதாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் காந்திரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு அருகே வந்தபோது சின்ன காஞ்சீபுரம் போலீசார் 2 எம்.எல். ஏ.க்கள் உள்பட 250 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் இ.வளையாபதி தலைமையில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரிய காஞ்சீபுரம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடக்கோரி தி.மு.க.வினர் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டது. பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான ஆயில்மில் பகுதியில் வாகனங்களை மறித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவில் அணிவகுத்து நின்றன. போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். திடீர் மறியல் போராட்டம் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரியபாளையம் பஸ் நிலையத்தில் எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தண்டலம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், பா.ம.க. மாவட்ட துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.

கன்னிகைபேர் பஸ் நிறுத்தத்தில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியவேலு தலைமையிலும், கோடுவெளி பஸ் நிறுத்தத்தில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோடுவெளிகுமார் தலைமையிலும், வெங்கல் பஸ் நிறுத்தத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பாஸ்கர் தலைமையிலும், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் மாவட்ட பிரதிநிதி பாஸ்கர் தலைமையிலும், பூச்சி அத்திபேடு பஸ் நிறுத்தத்தில் மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் கோடுவெளி முரளி தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 540 பேர் கைதாகி தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் குன்றத்தூர் பேரூர் செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைப்போல் மாங்காடு பேரூர் செயலாளர் ஜபருல்லா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் குன்றத்தூர் குமணன் சாவடி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

நெடுஞ்சாலையில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கன்டன கோஷங்களை எழுப்பினார்கள். சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்துபோராட்த்தில் ஈடுபட்டவர்கள் 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story