மாவட்டத்தில் 20 இடங்களில் பஸ் மறியல்-போராட்டம்


மாவட்டத்தில் 20 இடங்களில் பஸ் மறியல்-போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 3:45 AM IST (Updated: 6 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மாவட்டத்தில் 20 இடங்களில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் பஸ் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அமைக்காத மத்திய அரசு மற்றும் அதற்குரிய நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் நேற்று முழு கடையடைப்பு மற்றும் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம், பஸ் மறியல் என போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் தி.மு.க. நகரச் செயலாளர் துரைஆனந்த் தலைமையில் பஸ் நிலையம் அருகில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், வக்கீல் அழகர்சாமி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், நகர தலைவர் பிரபாகரன், தி.க. மண்டல செயலாளர் மகேந்திரராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு நகரச் செயலாளர் ராஜேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 106 பேரை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தலைமையிலான போலீசார் கைதுசெய்தனர்.

இதேபோல் சிவகங்கையை அடுத்த மதகுபட்டி பஸ்நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோனை, வட்டார தலைவர் வேலாயுதம் உள்பட 103 பேரும், திருப்புவனம் மணி மந்திரி விநாயகர் கோவில் முன்பு தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் பஸ் மறியல் செய்த 106 பேரும், கல்லலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியல் செய்த 34 பேரும் கைதுசெய்யப்பட்டனர். தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகில் தி.மு.க. நகர செயலாளர் பாலா தலைமையில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மறியல் செய்த 62 பேரை தேவகோட்டை டவுன் போலீசார் கைது செய்தனர்.

இளையான்குடியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் தலைமையிலும், திருப்பத்தூரில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையிலும் பஸ் மறியல் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 20 இடங்களில் நடைபெற்ற பஸ் மறியலில் 23 பெண்கள் உள்பட 1,419 பேரை போலீசார் கைதுசெய்தனர். முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story