மத்திய அரசை கண்டித்து 41 இடங்களில் சாலை மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து 41 இடங்களில் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 4:00 AM IST (Updated: 6 April 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 41 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,794 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பல இடங்களில் ரெயில் மறியல், சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பிறகு அங்கிருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன்பிறகு அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொன்முடி எம்.எல்.ஏ., ராதாமணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் புகழேந்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சீனிவாசக்குமார், ரமேஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபு கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் உள்பட 270 பேரை போலீசார் கைது செய்தனர்

செஞ்சியில் மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச்சென்று கூட்டுரோடு அருகில் உள்ள தபால் அலுவலக கதவை இழுத்து மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கூட்டுரோட்டில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையொட்டி செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபூபதி, மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், ம.தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் ஏ.கே.மணி உள்பட 165 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர செயலாளர் பொன்ராமகிருஷ்ணன், மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் மற்றும் தி.மு.க.வினரும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

மயிலம் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கூட்டு ரோட்டில் மயிலம் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றிய செயலாளர்கள் அண்ணா துரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால் உள்பட 196 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். சங்கராபுரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகுமார் தலைமையில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 40 பேரையும் சங்கராபுரம் போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனத்தில் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 103 பேரையும், சானிமூலை பகுதியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கெடிலத்தில் திருநாவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வசந்தவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 101 பேரும், வளவனூரில் தி.மு.க. நகர செயலாளர் ஜீவா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 51 பேரும், வெள்ளிமேடுபேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், அரசூர் கூட்டு சாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், பகண்டை கூட்டுசாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், கண்டாச்சிபுரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், கூனிமேட்டில் மீனவர் அணி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரும், ஒலக்கூர் கூட்டுசாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 58 பேரும், உளுந்தூர்பேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும், கூட்டேரிப்பட்டில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேதுநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 80 பேரும், தீவனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 65 பேரும், சிறுவாடியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நல்லூர்கண்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரும், டி.நல்லாளம் கூட்டுசாலையில் தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் நமச்சிவாயம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 51 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் தி.மு.க. நகர செயலாளர் கணேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரும், வளத்தி கூட்டுசாலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரும், அவலூர்பேட்டையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், காணையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்பட்டுராஜா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரும், தியாகதுருகத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரையும், கீழத்தாழனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 35 பேரையும், சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சசிக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரையும், விக்கிரவாண்டியில் தி.மு.க. நகர செயலாளர் நயினாமுகமது தலைமையில் மறியலில் ஈடுபட்ட 26 பேரையும், கண்டமங்கலத்தில் தி.மு.க. விவசாய அணி நிர்வாகி செல்வரங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரையும், சின்னசேலத்தில் தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரையும், கிளியனூரில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 37 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 17 பேரையும், விக்கிரவாண்டியில் தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஜெயபால் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பேரையும், அரகண்டநல்லூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 54 பேரையும், ஆசனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரையும், உளுந்தூர்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரையும், களமருதூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரையும், மேல்சித்தாமூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களை தவிர சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் முழு அடைப்பையொட்டி வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வணிகர் சங்க தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனே சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர். மேலும் திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் வக்கீல் சங்க தலைவர் அருணகிரி தலைமையில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 41 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,794 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இது தவிர உளுந்தூர்பேட்டை ரெயில் நிலையத்தில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மணிகண்ணன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Next Story