காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் தி.மு.க. கட்சிகள் மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் தி.மு.க. கட்சிகள் மறியல்
x
தினத்தந்தி 6 April 2018 4:00 AM IST (Updated: 6 April 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 20 இடங்களில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 3,524 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் காரியாபட்டி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் உள்ள 11,200 கடைகளில் 2,200 கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் உள்ள கடைகளில் 20 சதவீத கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலான ஊர்களில் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுவதை யொட்டி கடை அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் போக்குவரத்துக்கழக பஸ்களும், தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயங்கின. போக்குவரத்து கழக டவுன் பஸ்கள் மட்டும் காலை 6 மணிக்கு மேல் இயக்கப்பட்டன. நெடுந்தூர பஸ்கள் வழக்கம் போல் அதிகாலையில் இருந்தே இயங்கின. லாரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. ராஜபாளையத்தில் மட்டும் 150 ஆட்டோக்கள் ஓடவில்லை.

முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் 20 இடங்களில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை எம்.எஸ்.கார்னர் பகுதியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 9 பெண்கள் உள்பட 462 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் பஸ் மறியல் செய்தனர். போராட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பஸ் மறியல் செய்த 11 பெண்கள் உள்பட 677 பேரை காரியாபட்டி போலீசார் கைது செய்தனர். பஸ் மறியலில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், நகர செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, தோப்பூர் தங்கப்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் காதர்மொய்தீன், மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன், தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், ம.தி.மு.க. நகர செயலாளர் ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 220 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பஸ்நிறுத்தம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.தனுஷ்கோடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.பி.லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராமர், ம.தி.மு.க. வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 280 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ராஜபாளையம் ஸ்டேட் வங்கி முன்பு தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 15 பெண்கள் உள்பட 320 பேர் மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

சத்திரப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தலைமையில் அனைத்து கட்சியைச் சேர்ந்த 6 பேர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். சங்கரன்கோவில் முக்கு பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசியில் பஸ் நிலையத்தில் காளிராஜன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 15 பெண்கள் உள்பட 126 பேர் கலந்து கொண்டனர். இதே போல் திருத்தங்கல் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் உதயசூரியன் தலைமையில் 101 பேர் கலந்து கொண்டனர். சாட்சியாபுரத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 112 பேர் கலந்து கொண்டனர். எம்.புதுப்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் தங்கராஜா தலைமையில் 122 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோட்டில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியாண்டவர் தலைமையில் பஸ் மறியல் நடைபெற்றது. ம.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஞானதாஸ் உள்பட 61 பேரை ஆலங்குளம் போலீசார்கைது செய்தனர்.

வெம்பக்கோட்டையில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கனிராஜ் தலைமையில் மறியல் நடந்தது. மாவட்ட பிரதிநிதிகள் பொன்னழகு, முத்துராஜ், ரெட்டியபட்டி ஊராட்சி செயலாளர் பொன்ராஜ், செவல்பட்டி காசிபாண்டியன் உள்பட 112 பேர் கைது செய்யப்பட்டனர். தாயில்பட்டி, செவல்பட்டி பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாத்தூரில் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 297 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டத்தில் நேற்று 20 இடங்களில் மறியல் நடைபெற்றது. இதில் 188 பெண்கள் உள்பட 3,524 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story