காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அரசியல் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட கைது செய்யப்பட்டனர்.

லால்குடி,


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல், ரெயில் மறியல், கடையடைப்பு போன்ற பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி திருச்சி மாவட்டத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் முடிவின்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.

இதில் லால்குடியில் தி.மு.க., காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு லால்குடி எம்.எல்.ஏ. சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இதேபோல் லால்குடி சிறுதையூர் 4 ரோடு பகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெயில் நிலையம் முற்றுகை


மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயிலை லால்குடியில் மறித்து போராட்டம் நடந்தினர். சிறுதையூர் 4 ரோடு பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். லால்குடி பகுதியில் ரெயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மொத்தம் 20 பெண்கள் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லால்குடி நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவெறும்பூர் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று திருவெறும்பூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு, சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம்


மண்ணச்சநல்லூரில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதுமலை பிரிவு ரோட்டில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சமயபுரம் கடைவீதியில் நகர தி.மு.க. செயலாளர் துரை.ராஜசேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 76 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். திருச்சி– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் மறியலில் ஈடுபட்ட 17 பேரை சிறுகனூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பி.கே.அகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மண்ணச்சநல்லூர், சமயபுரம், புறத்தாக்குடி, திருப்பைஞ்சீலி போன்ற பல்வேறு ஊர்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

உப்பிலியபுரம், தா.பேட்டை


உப்பிலியபுரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோ‌ஷங்களை எழுப்பியபடி சாலை மறியல் செய்ய முயன்றபோது, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தென்னிந்திய நதிகள் இணைப்புக்குழு உள்ளிட்டவற்றை சேர்ந்த மொத்தம் 147 பேர் கைது செய்யப்பட்டனர்.

தா.பேட்டை கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, துறையூர் – நாமக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 110 பேரை தா.பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் தா.பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் வழக்கம்போல் ஓடின. ஆனால் பஸ்களில் பயணிகள் குறைந்த அளவிலேயே இருந்தனர்.

கல்லக்குடி


புள்ளம்பாடி ஒன்றிய தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு இருந்து அவர்கள் ஊர்வலமாக ரெயில் நிலையத்திற்கு சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, த.மா.கா உள்ளிட்ட கட்சியினர், காமராஜ் மன்றத்தினர், புள்ளம்பாடி பாசன விவசாய சங்கத்தினர் ஆகியோர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து, முற்றுகையிட்டனர். 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் புள்ளம்பாடி– திருமழபாடி சாலையில் மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 127 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கல்லக்குடி, புள்ளம்பாடி பேரூராட்சி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கல்லகம் கிராமத்தில் தி.மு.க. நிர்வாகி பூமிநாதன் தலைமையில் திருச்சி– சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லக்குடியில் டால்மியா சிமெண்ட் தேசிய தொழிலாளர் சங்கம் சார்பில் பொது செயலாளர் சந்திரசேகர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

முசிறி


முசிறி கைகாட்டியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் 90 பேரை முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கைது செய்தார்.

மேலும் முசிறியில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சேலம் ரோடு, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, பைபாஸ் ரோடு, தா.பேட்டை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடை உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. கடையடைப்பு காரணமாக முசிறி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

ஜீயபுரம்


ஜீயபுரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ஜீயபுரம் கடைவீதியில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து ஜீயபுரம் ரெயில் நிலையத்தில், திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர். அவர்களை ஜீயபுரம் போலீசார் கைது செய்தனர். இதில் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தமர் கோவில் ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்துராஜ் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரெயிலை மறித்து, மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 26 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர்.


Next Story