காவிரி நீர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் பழ.கருப்பையா பேச்சு


காவிரி நீர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் பழ.கருப்பையா பேச்சு
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சேலத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா பேசினார்.

சேலம்,


சேலம் மத்திய மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதி தி.மு.க. சார்பில் ஈரோடு மண்டல மாநாடு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் கோரிமேட்டில் நடந்தது. அஸ்தம்பட்டி பகுதி தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.வு.மான வக்கீல் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் பழ.கருப்பையா பேசியதாவது:–

தமிழக அரசியலில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என பல போராட்டம் நடந்துள்ளது. ஆனால் அண்மை காலமாக காவிரி நீருக்காக போராடி வருகிறோம். காவிரி நீர் 4–ல் 3 பங்கு தமிழகத்தில் தான் ஓடுகிறது. இதில் மேட்டில் மட்டும் கர்நாடகம் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் நீரின் அளவை குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாலைவனமாகும்


தமிழகம் காவிரியை இழந்து விடுமானால் அதற்கு பிறகு இந்தியாவுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மேலும் கர்நாடக தேர்தலுக்காக அவகாசம் கேட்டுள்ளது.

காவிரி நீர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். முன்னதாக அவர்கள் இதை செய்திருந்தால் உலகமே நம்மை திரும்பி பார்த்திருக்கும். மத்திய அரசுக்கு ஒரு பயம் ஏற்பட்டிருக்கும். மக்கள் தான் போராடி காவிரி நீரை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு அடிமையாக இந்த அரசு உள்ளதால் காவிரி நீரை மீட்க முடியாது.

வெற்றிடம் இருக்காது


தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று ஒரு நடிகர் கூறி வருகிறார். நாட்டின் பாதி நாங்கள் உள்ளதால் வெற்றிடம் எப்போதும் இருக்காது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தீர்ப்பு வந்தால் இந்த அரசு உடனடியாக கலைந்து விடும். எனவே 6 மாத காலத்திற்குள் இந்த அரசு கலைந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, முன்னாள் மேயர் சூடாமணி, மாநகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் சுந்தரராஜன், செல்வம், மாதேஸ்வரன் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story