முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை குட்ஷெட்டில் 250 லாரிகள் வேலைநிறுத்தம்


முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை குட்ஷெட்டில் 250 லாரிகள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை குட்ஷெட்டில் 250 லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் சரக்கு ரெயிலில் வந்த அரிசி மூட்டைகளும் இறக்கப்படவில்லை.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தஞ்சையில் நேற்று முழு அடைப்புபோராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்புக்கு தஞ்சை மாவட்ட குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சையில் 250 லாரிகள் இயங்கவில்லை. இந்த லாரிகள் அனைத்தும் தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள குட்ஷெட் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

ஆர்ப்பாட்டம்

வழக்கமாக மத்திய தொகுப்பில் இருந்து தஞ்சைக்கு அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் வரும். இந்த மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். ஆனால் நேற்று தஞ்சைக்கு வெளி மாநிலத்தில் இருந்து 21 பெட்டிகளில் அரிசி மூட்டைகள் வந்தன. ஆனால் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அரிசி மூட்டைகள் இறக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் குட்ஷெட் பகுதியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் மகாலிங்கம், துணைத்தலைவர் சுரேஷ்குமார், துணை செயலாளர் வள்ளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர்.


Next Story