எழுமலை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்


எழுமலை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

எழுமலை அருகே எஸ்.பாப்பிநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது. காளைகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி. இங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. சுகன்யா, தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் துள்ளிக் குதித்து சென்றன.

இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 318 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. 281 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி, கெடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 16 பேர் காயமடைந்தனர். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்யாணக் குமார், எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story