பெரிய மாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைக்க சென்ற நிலமீட்பு இயக்கத்தினர் 610 பேர் கைது


பெரிய மாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைக்க சென்ற நிலமீட்பு இயக்கத்தினர் 610 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 4:45 AM IST (Updated: 6 April 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெரிய மாரியம்மன் கோவில் அருகே பொங்கல் வைக்க சென்ற நிலமீட்பு இயக்கத்தினர் 610 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈரோடு,

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் நேற்று பொங்கல் வைக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு ஒன்று திரண்டனர்.

இந்த போராட்டத்துக்கு நில மீட்பு இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசபதி, பொருளாளர் ராஜூகண்ணன், திட்டக்குழு தலைவர் பூசப்பன், ஆலோசகர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்டவர்கள், பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நிலத்தில் பொங்கல் வைப்பதற்காக பானையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அவர்கள், பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க வேண்டும். இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

80 அடி சாலையை அமல்படுத்த வேண்டும். கோவிலின் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து மணிக்கூண்டு சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், அமுதா, சரவணன், மோகன்ராஜ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 355 பெண்கள் உள்பட மொத்தம் 610 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story