தூத்துக்குடியில் கடற்சார் வாணிப தினம்: இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு


தூத்துக்குடியில் கடற்சார் வாணிப தினம்: இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு
x
தினத்தந்தி 6 April 2018 4:30 AM IST (Updated: 6 April 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கடற்சார் வாணிப தினத்தையொட்டி இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நேற்று நடந்தது. இதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தூத்துக்குடி, 

1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முதன் முதலாக மும்பையில் இருந்து லண்டனுக்கு வாணிப கப்பல் இயக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 5-ந் தேதி கடற்சார் வாணிப தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடற்சார் வாணிபதினம் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியையொட்டி புதிய துறைமுகத்தில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு சொந்தமான எம்.டி.தூத்துக்குடி, ஓசன்பிரேவ், ஓசன் என்டோவர், நல்லதண்ணி, ரோந்து படகுகள் ஹர்சா-3, அலைமகள், பொதிகை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ரோந்து படகுகள் அணிவகுத்து வந்தன.

இந்த இழுவை கப்பல்கள், படகுகள் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. பலூன்களும் பறக்கவிடப்பட்டு இருந்தன. தொடர்ந்து இழுவைகப்பல்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து கப்பல்களில் ஏற்படும் தீயை அணைப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. தண்ணீரில் விழுந்தவரை மீட்பது பற்றியும் செயல்முறை விளக்கம் காண்பித்தனர். வண்ணப்பொடிகள் கலந்த தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர். இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

விழாவையொட்டி துறைமுக அதிகாரிகள், துறைமுக உபயோகிப்பாளர்கள், துறைமுக ஊழியர்கள், பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங் கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, வ.உ.சி.துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியை வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் நடராஜன் கடற்சார் வாணிப தின கொடியை ஏற்றி வைத்து, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள், துறைமுகசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கடலில் உயிர் நீத்த மாலுமிகளின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூணுக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் மரியாதை செலுத்தினர்.

Next Story