தலைமை தேர்தல் கமிஷனருடன் தேவேகவுடா சந்திப்பு


தலைமை தேர்தல் கமிஷனருடன் தேவேகவுடா சந்திப்பு
x
தினத்தந்தி 6 April 2018 5:27 AM IST (Updated: 6 April 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்தை முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று நேரில் சந்தித்து பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவேகவுடா அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

பெங்களூருவில் முகாமிட்டுள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்தை சேஷாத்திரி ரோட்டில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று நேரில் சந்தித்து பேசினார். தேர்தலில் முறைகேடுகளை செய்ய மாநில காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்த முயற்சி செய்வதாக புகார் கூறினார். எனவே சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது என்று தேர்தல் கமிஷனரிடம் புகார் கூறினேன். மேலும் தேர்தலை நேர்மையாக நடத்த தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பு மாநில அரசு தனக்கு வேண்டிய அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தேவையான பதவிக்கு நியமித்துக் கொண்டுள்ளது. இந்த 3 மாதங்களில் நடைபெற்ற பணி இடமாற்றங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.

தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால் அத்தகைய பணி இடமாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறேன். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் அதிகளவில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இவை எல்லாவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி இருக்கிறேன். மேலும் நேர்மையான அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பயன் ஏற்படும் வகையில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் துறையில் பல்வேறு குறைகள் இருக்கின்றன. சட்டத்தை பின்பற்றுவது கூட குறைந்துவிட்டது. தேர்தலை நேர்மையாக நடத்த மத்திய போலீஸ் படையை பயன்படுத்த வேண்டும்.

போலீஸ் துறையில் ‘சூப்பர்‘ போலீஸ் மந்திரி (போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையாவை மறைமுகமாக குறிப்பிடுகிறார்) உள்ளார். விகாசசவுதாவில் போலீஸ் மந்திரியின் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதில் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளின் பங்கு முக்கியமானது. இதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார். 

Next Story