நெல்லையில் பரபரப்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தபால் நிலையத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்
நெல்லையில் தபால் நிலையத்திற்கு பூட்டுப்போட்டு போராட்டம் நடத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் உள்பட 225 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், நிர்வாகிகள் ரவிதேவேந்திரன், அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் தபால் நிலையத்தின் முன்பக்க கதவுக்கு பூட்டுப்போடுவதற்கு சென்றனர். ஆனால் போலீசார் இவர்களை உள்ளே செல்லாதவாறு தடுத்து நிறுத்தி நுழைவாயிலை பூட்டினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நுழைவு வாயில் கதவுக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஜான்பாண்டியன் உள்பட 225 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜான்பாண்டியன் கூறுகையில், தமிழக விவசாயிகளுக்கு காவிரியில் கிடைக்கவேண்டிய உரிமை கிடைக்கவேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது கண்டிக்கத்தக்கது. இதனால் தான் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
Related Tags :
Next Story