காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது
x
தினத்தந்தி 7 April 2018 3:30 AM IST (Updated: 7 April 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உள்ளிக்கடையை சேர்ந்தவர்கள், கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையில் நடந்த காதணி விழாவில் பங்கேற்க வேனில் சென்றனர். கபிஸ்தலம் அருகே சோமேஸ்வரம் திருப்பத்தில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த முருகேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, அமைச்சர் துரைக்கண்ணு நேற்று பார்த்து ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கினார். பின்னர், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், முன்னாள் தொகுதி செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மருத்துவகல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், “வேன் கவிழ்ந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தேன். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ? அதன்படி அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மேலும் உச்சநீதிமன்றத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்”என்றார்.

Next Story