பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுகிறார்கள்


பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுகிறார்கள்
x
தினத்தந்தி 7 April 2018 4:00 AM IST (Updated: 7 April 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி துறைமுக எதிர்ப்பு இயக்கத்தினர் இன்று (சனிக்கிழமை) நடத்தும் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுவதாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தெரிவித்தார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே கோவளம்-மணக்குடி பகுதியில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் துறைமுகத்துக்கு ஆதரவு கோரி பா.ஜனதா சார்பில் இன்று (7-ந் தேதி) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் துறைமுக எதிர்ப்பு இயக்கத்தினர் இன்று நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அறிவித்தனர். இந்த போராட்ட அறிவிப்புகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார், எதிர்ப்பு இயக்கத்தினரின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதற்கிடையே பா.ஜனதா கட்சி முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தது.

எதிர்ப்பு இயக்கத்தினர் கன்னியாகுமரி பகுதிக்கு படகுகளில் வந்து கடல் முற்றுகை போராட்டத்தை இன்று நடத்துவதாக அறிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பலப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று நாகர்கோவில் வந்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கான கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் தலைமை தாங்கினார். இந்த கூட்டம் 1 மணி நேரம் நடந்தது.

கூட்டத்துக்கு பின்னர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கன்னியாகுமரி கோவளத்தில், வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக ஐ.ஜி. தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் 3 அதிகாரிகள், 7 கூடுதல் சூப்பிரண்டுகள், 25 துணை சூப்பிரண்டுகள் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் 850 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்டம் முழுவதும் 80 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்படும். ரோந்து பணியில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story