பெட்ரோல்–டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை


பெட்ரோல்–டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 April 2018 3:30 AM IST (Updated: 7 April 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்–டீசல் விலையை தினமும் உயர்த்துவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பெட்ரோல்– டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம் என்ற நிலை மாறி, வீட்டுக்கு ஒரு கார், வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையை பொருத்து இருசக்கர வாகனங்கள் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட வாகனங்களில் செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக ஒரு நாள் பெட்ரோல்–டீசல் கிடைக்காவிட்டாலும் வாகனங்கள் வைத்து இருப்பவர்களின் நிலை அதோ கதிதான்.

இந்த நிலையில் மக்களின் முக்கிய தேவையான பெட்ரோல்–டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடுமையான வேதனையை கொடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் 15 நாளுக்கு ஒருமுறை அதன் விலையில் மாற்றம் செய்து வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து அதன் விலையை உயர்த்தியோ அல்லது குறைத்தோ வந்தன. பின்னர் தினமும் அதன் விலையில் மாற்றம் கொண்டு வர தொடங்கின.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல்–டீசல் விலை ரூ.10 உயர்ந்து உள்ளது. தினந்தோறும் அவற்றின் விலையில் மாற்றம் ஏற்படுவதால், லாரி வாடகை உள்பட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் வாடகையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் விலை உள்பட அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால் பெட்ரோல்– டீசல் விலை மட்டும் இந்த வரிக்குள் வரவில்லை. அதற்கு மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி என்று பல வரிகள் இருப்பதால், அதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே முன்பு இருந்ததுபோன்று பெட்ரோல்–டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கோவை கன்சியூமர் வாய்ஸ் செயலாளர் என்.லோகு கூறியதாவது:–

மத்திய அரசு எப்பொழுது எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கொடுத்ததோ, அதில் இருந்து அதன் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. இதன் காரணமாக ஆட்டோ, வாடகை கார்களின் வாடகையும் உயர்ந்து விடுவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. கொண்டு வந்ததன் முக்கிய நோக்கம் அனைத்து பொருட்களுக்கும் நாடு முழுவதும் ஒரே வரி என்பதுதான்.

ஆனால் பெட்ரோல் –டீசல் விலை அதற்குள் வராததால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிக்கப்படுவதால் அதன் விலையில் வித்தியாசம் ஏற்படுகிறது. சில மாநிலம் பெட்ரோல்–டீசல் மீது விதிக்கும் வரியை குறைத்து இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதன் வரி குறைக்கப்படவில்லை. அவ்வாறு குறைத்தால் பெட்ரோல்–டீசல் விலையில் ரூ.8 வரை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பெட்ரோல்–டீசல் விலையை மீண்டும் மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி முத்து மாணிக்கம் கூறியதாவது:–

வெளிநாடுகளில் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அந்த ஜி.எஸ்.டி.க்குள்தான் பெட்ரோல்–டீசலும் இருக்கிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் அதன் விலை ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் நமது நாட்டில்தான் மாநிலத்துக்கு மாநிலம் விலை வித்தியாசம் உள்ளது. தினமும் அதன் விலையில் மாற்றம் ஏற்படுவதால், பட்ஜெட்போட்டு செலவு செய்யும்போது, அதைவிட அதிகமாகி விடுவதால் சேமிப்புக்காக வைத்திருக்கும் பணத்தில் கைவைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துதான் வருகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 120 டாலருக்கும் அதிகமாக இருந்தபோது நமது நாட்டில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.75 ஆக இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாகதான் இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் மட்டும் பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வது ஏன் என்பது தெரியவில்லை. இது குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. எனவே மத்திய அரசு லாபத்தை கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதன் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜி.இருதயராஜா கூறியதாவது:–

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரிய வெங்காயம், பருப்பு உள்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வடமாநிலங்களில் இருந்துதான் தமிழகத்துக்கு வருகிறது. பெட்ரோல்–டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால், சென்னையில் இருந்து கோவைக்கு வரும் லாரி வாடகையில் தினமும் ரூ.500–ல் இருந்து ரூ.1000 வரை உயருகிறது. அந்த வாடகையை நாங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையை உயர்த்திதான் ஈடுகட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சிறு மிட்டாய் முதல் அனைத்து காய்கறிகளின் விலை, மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் மளிகை கடை வியாபாரிகளிடம் தகராறு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வாகனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பெட்ரோல்–டீசல் விலையை தினமும் உயர்த்துவதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். எனவே பெட்ரோல்–டீசல் விலையை தினமும் மாற்றும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்த திவ்யா கூறியதாவது:–

பெட்ரோல்–டீசல் விலைநிர்ணயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது பெரிதாக உயரவில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீது சுமை திணிக்கப்படவில்லை. தற்போது எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்வதால், பொதுமக்களின் நலனை பார்க்காமல் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு, விலையை உயர்த்தி அதன் சுமையை பொதுமக்கள் மீது திணிக்கிறது.

சமையல் செய்வதற்கு முக்கிய தேவையான கியாஸ் விலை நிர்ணயத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. அதுபோன்று பெட்ரோல்–டீசல் விலையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டால் விலையில் மாற்றம் இருக்காது. அதன் விலை உயராமல் இருக்கும் பட்சத்தில், காய்கறி, மளிகை பொருட்களின் விலையும் உயராது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story