புதுவையில், அடுத்த மாதம் முதல் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - அமைச்சர் கந்தசாமி


புதுவையில், அடுத்த மாதம் முதல் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - அமைச்சர் கந்தசாமி
x
தினத்தந்தி 7 April 2018 3:00 AM IST (Updated: 7 April 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அடுத்த மாதம் முதல் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு திறன் மேம்பாட்டு இயக்கம் மற்றும் தேசிய தொழில்முனைதல் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி மையம் இணைந்து தொழிலாளர் துறை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாமினை நடத்தியது. இந்த முகாம் கடந்த 4-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவில் தொழிலாளர் துணை ஆணையர் வல்லவன் வரவேற்று பேசினார். விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் 2 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 7 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. தற்போது ஆண்டுதோறும் ஏராளமான டாக்டர்கள், என்ஜினீயர்கள், ஆசிரியர்கள் படித்து முடித்து விட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது. எனவே தனியார் நிறுவனங்களில் அவர்கள் வேலையில் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 படித்து முடித்தவர்களுக்கும், கல்லூரி படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகள் அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் வேலைவாய்ப்பினை மையப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியை வருகிற 3 ஆண்டுகளுக்கு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பெயிண்டர், ஆசாரி, கொத்தனார் போன்ற பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. சிலர் மெக்கானிக் பணி செய்வர்.

ஆனால் அவர்கள் கல்வி அறிவு பெற்றிருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் இது போல பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் சிறுவயதிலேயே பெண்கள் சிலர் கணவரை இழந்து விதவைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்தவே சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு இது போல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தேசிய தொழில்முனைதல் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி மைய தலைமை ஆலோசகர் பிரபாகர் பகுகுணா, மூத்த ஆலோசகர் சஞ்சய் பரத்வாஸ், தொழிலாளர் துறை இயக்குனர் சாராங்கராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். 

Next Story