ஆற்காட்டில் சீட்டு நடத்தி கோடி கணக்கில் பண மோசடி செய்தவர் தலைமறைவு


ஆற்காட்டில் சீட்டு நடத்தி கோடி கணக்கில் பண மோசடி செய்தவர் தலைமறைவு
x
தினத்தந்தி 7 April 2018 2:24 AM IST (Updated: 7 April 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் சீட்டு நடத்தியவர் பலகோடி ரூபாய் மோசடிசெய்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக தஞ்சையை சேர்ந்தவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு பகுதியில் உள்ள தாழனூர் சத்திரம் கிராமத்தில் குடி புகுந்தார். அவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

பின்னர் அவர் ஆற்காடு ராஜ்முதலி தெருவில் சீட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். பட்டாசு பரிசு திட்டம், தங்க காசு திட்டம், வீட்டு மனை விற்பனை திட்டம், மாதாந்திர சீட்டு என வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏஜென்டுகள் மூலம் பணம் வசூல் செய்து வந்தார்.

இதற்காக பல்வேறு ஏஜென்டுகளை நியமித்திருந்தார். அவர்கள் வாடிக்கையாளர்களிடம் சென்று பணம் வசூல் செய்து நிறுவனத்தில் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சீட்டு நிறுவனம் நடந்தி வந்த தஞ்சையை சேர்ந்த நபர் கோவிலுக்கு செல்வதாக கூறி குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். பல நாட்களாகியும் அவர்கள் திரும்பவில்லை. அதன்பிறகே அவர் பல கோடி ரூபாய் சீட்டுப்பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பணம் செலுத்திய ஏஜென்டுகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று 10–க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.


Next Story