போக்குவரத்து போலீசாருக்கு டி.ஐ.ஜி. அறிவுரை
மக்கள் சேவகர் என்ற உணர்வுடன் போலீசார் பணியாற்ற வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு, டி.ஐ.ஜி. வனிதா அறிவுரை கூறினார்.
வேலூர்,
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த சம்பவங்கள் போலீசார் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதனால் போக்குவரத்து போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.வேலூர், திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கான விழிப்புணர்வு முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் நலவாழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 122 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
இதில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா கலந்துகொண்டு போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
போக்குவரத்து போலீசார் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். நீங்கள் பொதுஇடங்களில் பணிபுரிபவர்கள், எனவே கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நிர்வாக ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டால் நீங்கள் மீண்டும் வரமுடியாது. பயிற்சி காலத்தில் பயிற்சி கல்லூரி முதல்வர் 10 பேரை பணிநீக்கம் செய்தால் அவர்கள் கோர்ட்டுக்கு சென்றாலும் மீண்டும் பணியில் சேர்வது கஷ்டம்.அரசு வேலை என்பது சாதாரணமானதல்ல, இந்த வேலை வேண்டாம் என்றால் உடனடியாக எழுதிக் கொடுத்துவிட்டு போகலாம். விருப்பம் இல்லாமல் எந்த வேலையையும் செய்யக்கூடாது. உங்களுக்கு வசதி, வாய்ப்புகள், அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உங்களுக்கு காவிரி தண்ணீர் வேண்டாமா? ‘நீட்’ தேர்வு வேண்டுமா? ஏன் நீங்கள் போராடவில்லை. அரசு சொல்வதைத்தான் நாம் செய்யவேண்டும்.
போக்குவரத்து போலீசார், பொதுமக்களிடத்தில் காவல்துறையின் பெருமையை உயர்த்தி காட்டவேண்டும். பொதுமக்களின் சேவகர் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். தவறு செய்பவர்களை திருத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அதற்காக பொதுஇடங்களில் அவர்களிடம் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.