நாமக்கல்லில் தலைவர்கள் சிலை அருகே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்


நாமக்கல்லில் தலைவர்கள் சிலை அருகே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 7 April 2018 4:45 AM IST (Updated: 7 April 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

தலைவர்களின் சிலைகள் அருகே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பட்டு வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல்லில் அண்ணா, பெரியார், நேரு, காமராஜர், நேதாஜி, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் சிலைகள் அருகே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பட்டு வருகிறது.

நாமக்கல்லில், லைன் தெரு அருகே அ.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலைகளுக்கு கடந்த மாதம் 15-ந் தேதி மர்ம நபர்கள் சிலர் காவி துணியை பொன்னாடை போல் அணிவித்து, மாலையும் அணிவித்து இருந்தனர். இதனிடையே தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளின் மீது போர்த்தப்பட்டு இருந்த காவித் துணிகளையும், மாலைகளையும் அகற்றினர். மேலும் சிலைகளுக்கு காவி துணி மற்றும் மாலைகளையும் அணிவித்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தற்போது நாமக்கல் நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளை கண்காணிக்கும் வகையில் சிலைகளுக்கு அருகே சி.சி.டி.வி. கேமராக்களை நாமக்கல் மாவட்ட போலீசார் பொருத்தி உள்ளனர். அதன்படி லைன் தெரு அருகே உள்ள பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகள் மற்றும் அதன் எதிரில் உள்ள நேதாஜி சிலை, பஸ்நிலையம் எதிரில் உள்ள நேரு மற்றும் காமராஜர் சிலை மற்றும் மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை, நகராட்சி பூங்கா அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை என 7 இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அருகே சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

தற்போது இந்த சிலைகள் அனைத்தும் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story