பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார் காங்கிரஸ் குற்றச்சாட்டு
கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது.
பெங்களூரு,
கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா, காங்கிரசை சேர்ந்த உக்ரப்பா எம்.எல்.சி. ஆகியோர் பெங்களூருவில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
கர்நாடகத்தில் 2008–ம் ஆண்டு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா ஆட்சிக்கு வந்தார். அந்த சமயத்தில் ஹாவேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்தார். கனிம சுரங்கத்தில் ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டது.எடியூரப்பா அரிச்சந்திரனை போல் பேசுகிறார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். எடியூரப்பா பேச்சுக்கு பேச்சு காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதாக பேசுகிறார். மாநில காங்கிரஸ் அரசை பிரதமர் மோடி 10 சதவீத ‘கமிஷன்‘ அரசு என்று சொல்கிறார். ஆனால் எடியூரப்பா ஒரு பெரிய ஊழல்வாதி. 2009–10ம் ஆண்டில் பத்ரா மேல் அணை திட்டத்தில் எடியூரப்பா ரூ.1 கோடி லஞ்சம் வாங்கினார். அதற்குரிய ஆவணங்களை நாங்கள் இப்போது வெளியிட்டுள்ளோம்.
2011–ம் ஆண்டும் இதே திட்டத்தில் அவர் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றார். பத்ரா மேல் அணை திட்ட பணிகள் ரூ.1,033 கோடிக்கு முருடேஸ்வர் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது. எடியூரப்பா மொத்தம் ரொக்கமாக ரூ.4 கோடி லஞ்சம் பெற்றார். இதற்கு அவர் வருமான வரி செலுத்தவில்லை. அவரிடம் அபராதம் வசூலிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.எத்தனை சதவீத ‘கமிஷனை‘ எடியூரப்பா பெற்றார் என்பதை அவர் சொல்ல வேண்டும். ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எடியூரப்பா லஞ்சம் பெற்றார். உடனே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். எடியூரப்பா லஞ்சம் பெற்றது குறித்து பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.